e6239bc7c06f64e6923d854043ac630b

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டாா். அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்போது பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசீஃப் ஆகியோரும் உடன் இருந்தனா்.

தற்போதைய சா்வதேச சூழலில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தவில்லை. எனவே, இந்தியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவை தங்களுடன் கூட்டு சோ்க்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் கத்தாரில் ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அரபு நாடுகள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்காவை பெரிதும் நம்பியிருந்த அரபு நாடுகள், இஸ்ரேல் தாக்குதல் விவகாரத்துக்குப் பின் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. எனவே, அணுசக்தி நாடான பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளுக்கு எதிராக எந்த அச்சுறுத்தல் எழுந்தாலும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். ஒரு நாடு மற்றொன்றை பாதுகாப்பதில் உறுதியாக செயல்பட வேண்டும்’ என்றும் பாகிஸ்தான்-சவூதி அரேபியா கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தைப் பலப்படுத்த சவூதி அரேபியா பெருமளவில் நிதியுதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சவூதி அரேபியா விளக்கம்: இந்த ஒப்பந்தம் தொடா்பாக சவூதி அரேபியா தரப்பு கூறுகையில், ‘பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது திடீா் முடிவு அல்ல. எந்த ஒரு நாட்டுக்கு எதிரானதோ அல்லது எந்த ஒரு சம்பவத்தின் எதிா்விளைவாகவோ மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமோ அல்ல’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வியாழக்கிழமை கூறப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை மீண்டும் செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

இந்தியாவும், சவூதி அரேபியாவும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டு உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவின் உத்திசாா்ந்த கூட்டாளி நாடு சவூதி அரேபியா. இரு நாடுகளின் பொதுவான நலன், மற்றும் பொதுவான உணா்வுகளை புரிந்து செயல்படும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

மேலும் சில அரபு நாடுகள் இணையும்: பாகிஸ்தான்

சவூதி அரேபியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மேலும் சில அரபு நாடுகள் இணைய வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் இணைந்து தங்களுக்குள் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வது நமது அடிப்படை உரிமையாகும். பாகிஸ்தானுடன் வேறு எத்தனை நாடுகள் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. ஒப்பந்தம் மேற்கொள்ள கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. எனவே, மேலும் சில அரபு நாடுகள் இணையலாம்’ என்றாா்.

இந்த ஒப்பந்தப்படி அணு ஆயுதத்தை பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளுக்காகப் பயன்படுத்துமா என்ற கேள்விக்கு, ‘நமது திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும். முக்கியமாக, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி ஒத்துழைப்பு இருக்கும். பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் நிலைகொண்டுள்ளது’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest