chess-champions

ஜார்ஜியாவில் ‘ஃபிடே மகளிர் உலகக் கோப்பை’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையும் சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக் முன்னாள், உலக சாம்பியனும் சீன வீராங்கனையுமான டேனை எதிர்கொண்டார். முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியின் 101-வது நகர்த்தலில் திவ்யா தேஷ்முக் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார்.

இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கோனேரு ஹம்பி
கோனேரு ஹம்பி

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை கோனேரு ஹம்பி சீனாவின் லெய் டிங்ஜீயுடன் மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0 – 1.0 என சமநிலையில் இருந்தது.

நேற்று, ‘டை பிரேக்கர்’ நடந்தது. இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய கோனேரு ஹம்பி, 65-வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

இரண்டாவது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய கோனேரு ஹம்பி, 39-வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0 – 2.0 என மீண்டும் சமநிலை வகித்தது.

திவ்யா தேஷ்முக்
திவ்யா தேஷ்முக்

அடுத்த 4 போட்டியில், 3-ல் அசத்திய கோனேரு ஹம்பி, முடிவில் 5.0 – 3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்திருக்கிறார். பைனலில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்று மோதுகின்றனர்.

இதில் யார் வெற்றிபெற்றாலும் இந்தியா வெற்றிப்பெற்றதாகக் கருதப்படும் நிலையில், திவ்யா தேஷ்முக் VS கோனேரு ஹம்பி என களம் சூடுபிடித்திருக்கிறது. இந்தப் போட்டி செஸ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest