
ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றுகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டு செல்வப்பெருந்தகை தடுக்கப்பட்டிருக்கிறார். ‘இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை!’ என செல்வப்பெருந்தகை ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.
செல்வப்பெருந்தகை பேசியதாவது, ‘திருச்செந்தூர் முருகர் கோயிலின் குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அங்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். அதிகாரிகள் இங்கே மெத்தனப் போக்கை கடைப்பிடித்திருக்கின்றனர்.

யார் யார கட்டுப்படுத்துறதுன்னு புரியாம இருக்காங்க. 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் போக்கி விட முடியாது. சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிற முதல்வருக்கும் அறநிலையத்துறை அமைச்சருக்கும் எந்த களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மக்களோடு மக்களாக நின்று தரிசித்துவிட்டு வந்தேன். இறைவனை கூட பார்க்க முடியவில்லை. தமிழிசையை ஏன் அனுமதித்தார்கள், என்னை ஏன் தடுத்தார்கள்? என புரியவில்லை. அதிகாரிகள் அதிகாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் பிரச்னை.’ என்றார்.