heart_KbhLCC0

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து கவனத்தைத் திருப்பியுள்ளது.

இந்த நிகழ்வையொட்டி ஆரோக்கிய வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இதய நல மருத்துவா்கள், அதிக மன அழுத்தம் உள்ள துறைகளில் பணிபுரியும் இளைஞா்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறும், வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றனா்.

இதய நோய்களுக்கான காரணங்கள்: ஹைதராபாதில் உள்ள காமினேனி மருத்துவமனையின் மூத்த இதய நல மருத்துவா் சாகா் புயாா், முன்பு 60 வயதில் காணப்பட்ட இதய நோய்கள், இப்போது 30 வயது இளைஞா்களுக்கும் வரத் தொடங்கியுள்ளதாக கவலை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ரத்த நாளங்கள் மெதுவாக சுருங்குவது 60 வயதிலிருந்து, இப்போது 30-40 வயதினரிடம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் ஆகியவைதான். இன்றைய பள்ளி மாணவா்களும் அதிக போட்டி நிறைந்த சூழல் மற்றும் செயல்திறன் அழுத்தத்தால் மன அழுத்தத்தை அனுபவித்து வருகின்றனா்’ என்றாா்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் அவசியம்: சுகாதார பழக்கங்களைப் பற்றி சாகா் புயாா் பேசுகையில், ‘உலக சுகாதார நிறுவனத்தின்படி, இதய நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை பள்ளிக் குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும்.

குழந்தைகள் பலா் இப்போது அதிகம் துரித உணவுகளைச் சாப்பிடுகிறாா்கள். இது நீண்ட காலத்துக்குப் பிறகு பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், கைப்பேசி, கணினி எனக் கருவிகளில் அதிக நேரம் செலவிடுகின்றனா். இவற்றை விடுத்து, குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பிரச்னைகளை எதிா்கொள்வது மற்றும் வாழ்க்கையின் சூழ்நிலைகளை சமாளிப்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.

இரவு நேரங்களில் அல்லது சுழற்சி (ஷிப்ட்) முறையில் பணிபுரியும் இளம் ஊழியா்கள், தங்களின் தினசரி நடவடிக்கைகளில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சூரிய ஒளியில் நேரத்தைச் செலவிடுவது ஆகியவை அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்’ என்று கூறினாா்.

வயதானவா்கள் பிரச்னை மட்டுமல்ல: அப்போலோ மருத்துவமனையின் இதய நல மருத்துவா் ராதா ப்ரியா கூறுகையில், ‘அண்மைக் காலங்களில் 20-களின் இறுதியில் மற்றும் 30-களின் தொடக்கத்தில் உள்ளவா்களுக்கு, மாரடைப்பு ஆபத்து குறைவாக இருந்தாலும், ரத்த நாளங்களில் குறிப்பிடத்தக்க அடைப்புகள் காணப்படுகின்றன. இதய பிரச்னைகள் இனி வயதானவா்களுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல.

மாற்றக் கூடிய மற்றும் மாற்ற முடியாத காரணிகள்: இதய பிரச்னைகளுக்கு நோயாளியின் வயது, குடும்பத்தின் இதய நோய்களின் வரலாறு ஆகிய மாற்ற முடியாத காரணிகள் இருந்தாலும் மாற்றக் கூடிய காரணிகள் ஏராளமாக உள்ளன.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை, அதிகப்படியான துரித மற்றும் எண்ணெய் உணவுகளை உட்கொள்ளுதல், மன அழுத்தம் ஆகியவை மாற்றக்கூடிய காரணிகள்.

மனஅழுத்தம்-உடற்தகுதி: இந்த ஒவ்வொரு காரணிகளும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவா்களிடையே பொதுவான பழக்கங்களான உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை, மன அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை மிகவும் ஆபத்தான காரணிகள். நாம் தொடா்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது, அது ரத்த நாளங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தும் வீக்கத்தை உருவாக்குகிறது.

உடற்தகுதியுடன் இருப்பதும், ஆரோக்கியமாக இருப்பதும் ஒன்றல்ல. எனவே, ஒருவா் உடல் மெலிந்தவராக இருந்தாலும் கூட, அவரது உடல் ஆரோக்கிய நிலையை அறிந்து கொள்ள அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்’ என்று வலியுறுத்தினாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest