
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இன்று சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியவர் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவர் பேசியதாவது, ‘திமுக-வின் ஆட்சியை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அற்புதமான ஆட்சி என விதந்தோதியிருக்கிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களே உஷாராக இருங்கள். உங்களுக்கு சீட்டை எல்லாம் குறைத்து விடுவார்கள். நீங்கள் வேறு எங்கு செல்ல முடியும்? 4 ஆண்டுகளாக இந்த நாட்டிலே நடக்கிற அக்கிரமங்களை தட்டிக் கேட்க கூட்டணிக் கட்சிகளுக்கு வக்கில்லை.
கூட்டணி கட்சிகளுக்கே ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் மாநாட்டிற்கு அனுமதி இல்லை. திருச்சியில் விசிக-வின் மாநாட்டுக்கு அனுமதி இல்லை. விசிக-வால் கொடிக்கம்பம் நட முடியவில்லை. இவ்வளவு அசிங்கப்பட்டா நீங்கள் அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? அதிமுக-வை பொறுத்தவரை கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

இன்றைய சூழலில் எல்லா கட்சிகளும் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன. திமுக-வும் பாஜக-வோடு கூட்டணி வைத்திருக்கிறது. 1999 இல் அவர்களின் கூட்டணியில்தான் அமைச்சரவையிலெல்லாம் இடம்பெற்றிருந்தார்கள். இன்றைக்கு நாம் பாஜக-வுடன் கூட்டணி வைத்தவுடன் நம்மை பார்த்து திமுக-வினர் பயப்படுகின்றனர்.’ என்றார்.