
கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (செப்.9) ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து எந்தவொரு முன்னறிவுப்பும் இன்றி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களுக்கு, பல்வேறு அரபு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் கத்தாருக்கு இன்று (செப்.10) நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத்தை சந்தித்த அவர், அமீரக நாடுகளின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் கத்தாருக்கு தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றன. மேலும், நட்பு ரீதியாக துபையின் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துடன், ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளின் பட்டத்து இளவரசர்களும், இன்று அல்லது நாளை கத்தாருக்கு ஆதரவாகப் பயணம் மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !