
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் இன்று (ஜூலை 13) கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) காலை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஸா – இஸ்ரேல் இடையே கடந்த 21 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையிலான போரை மீண்டும் இடைநிறுத்தம் செய்வதற்காகவும், எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காகவும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட நட்பு நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
வடக்கு காஸாவின் பெயித் ஹனோன் பகுதியில் கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் 40 குண்டுகளை வீசியதாகவும், இஸ்லாமிய பல்கலைக் கழகம் அருகேவுள்ள கட்டடங்களைக் குறிவைத்தும் தாக்குதலை நடத்தியதாகவும் காஸா தெரிவித்துள்ளது.
இதேபோன்று தெற்கு ராஃபாவில் அரசுக்கு சொந்தமான கட்டடங்களைக் குறிவைத்தும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. மேலும், தெற்கு காஸாவில் பல்வேறு முகாம்களில் உள்ள 6 லட்சம் மக்களை இடப்பெயர்வு செய்யவுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதற்காக தொடர் தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
கத்தாரைச் சேர்ந்த சர்வதேச ஊடகம் (அல்ஜஸீரா) நடத்திய ஆய்வில், ஐக்கிய நாடுகள் அவைக்குச் சொந்தமான செயற்கைக்கோள் மையத்தில் உள்ள தரவுகளின்படி, ராஃபாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தில், 2025 ஏப்ரல் 4 நிலவரப்படி இடிக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 15,800 ஆக இருந்த நிலையில், ஜூலை 4 நிலவரப்படி 28,600 ஆக அதிகரித்துள்ளது.
காஸாவின் மீது தொடர் தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதன் தீவிரத்தையே இந்தத் தரவுகள் குறிப்பிடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க |கழிப்பறையில் புகைபிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!