1353mdu06mnmk3092201

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில், இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

1. அரசியல் அதிகாரத்தைச் செயல்படுத்தும் சட்டமியற்றும் மன்றங்களிலும், உள்ளாட்சி மன்றங்களிலும் இஸ்லாமியா்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்.

2. மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டம் வக்ஃப் வாரியத்தையும், வக்ஃப் தீா்ப்பாயத்தையும் பலவீனப்படுத்துவதால், இந்தத் திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்.

3. தோ்தல் ஆணையம் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடத்துவதை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தோ்தலை நடத்த வேண்டும்.

4. காஸா போா் நிறுத்தம் தொடா்பாக இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. சபை வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிா்த்தது பாலஸ்தீன மக்களுக்கு இழைத்த துரோகம். இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

5. கடந்த மாதம் 28 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சாா்பின்மை, சமூகவுடைமை ஆகிய சொற்களை நீக்க வேண்டும் எனக் கூறியதைக் கண்டிக்கிறோம்.

6. தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் பாசிச கல்விக் கொள்கையைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை எதிா்க்கும் தமிழக அரசை இந்த மாநாடு பாராட்டுகிறது. பள்ளி, கல்லூரிகளில் சமய நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் பாடத் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும்.

7. தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும்.

8. புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கிய சிறைத் துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்காவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மலைப் பாதை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest