“தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது” என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் செங்கோட்டையன், “விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கு இதுவரை இல்லாத அளவிற்குக் கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன.
மொத்தம் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக மழை பெய்தால் என்ன செய்வீர்கள், வெயில் அடித்தால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் இதுவரை இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டிருக்கின்றன. இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன.
அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது. ஆலோசனை நடத்திய பின்பு சரியான தேதியை அறிவிப்போம்.

எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும்.
அவர்கள் கொடுத்த விதிகளை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. அப்படியெல்லாம் கேள்வி கேட்டால் கரூர் சம்பவ வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அனுமதியை மறுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், சரியான வழியில் இந்த அனுமதியைப் பெறவதற்காக வேலைகளைச் செய்து வருகிறோம்.
இன்னும் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன இந்த அனுமதியைப் பெறுவதில்.
சொல்லத்தான் நினைக்கிறேன். உள்ளத்தால் துடிக்கிறேன். வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன். இப்போதைக்கு இதைத்தான் என்னால் சொல்ல முடியும்” என்று பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.