Seeman

‘ஈரோடு மாவட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் திரும்பப் பெறப்படும் என்று மிரட்டல் வருகிறது’ என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

முதலமைச்சர் ஸ்டாலின்,

ஸ்டாலின்
ஸ்டாலின்

“ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த, ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு, முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் Q – பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து, அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியும் தருகிறது

வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q – பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விசமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியும் தருகிறது.

வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும், ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.

சீமான்
சீமான்

தமிழ் இனத்திற்கும், நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து, தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன், ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி, நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும், ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானது?

வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்?

இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு, எல்லையில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது?

திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?

சீமான்
சீமான்

நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா?

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும், மானத்தையும், மண்ணையும், மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு, ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q – பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ, வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?

ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q – பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

ஸ்டாலின் | திமுக அரசு
ஸ்டாலின் | திமுக அரசு

ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q – பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இதற்கு மேலும், Q – பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest