
உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஜூலை 14) எச்சரித்துள்ளார்.
50 நாள்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால், சண்டை நிறுத்தத்திற்கானதொரு ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் வரி விதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் மார்க் ரூட்டுடன் நடைபெற்ற ஆலோசனையில் இதனை அறிவித்துள்ளார் டிரம்ப்.
இதனிடையே அமெரிக்க அதிபரின் சிறப்பு பிரதிநிதி, உக்ரைனில் அந்நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
ரஷிய அதிபர் புதினுடன் நல்ல நட்புறவை கொண்டுள்ள டிரம்ப் உக்ரைன் விவகாரத்தில் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் வெளிப்பாடாக, இந்த முடிவை டிரம்ப் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், ரஷியா தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிர்வினையாற்றப்படவில்லை.