
மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “கழகப் பொதுச்செயலாளர் நேர்மைமிகு தலைவர் வைகோ அவர்கள் தங்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவராகவும், மேடைகளிலும், மாநாடுகளிலும் தன் அருகில் வைத்து அழகு பார்த்தவராகவும், தங்களை மட்டுமே பெரும் கவனத்தில் கொண்டு அதிக முறை தேர்தல்களில் வாய்ப்புகளை வழங்கியவர். அவர் நெஞ்சத்தை ஆக்கிரமித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் நீங்களும் ஒருவர்.

தான் பங்கேற்க இயலாத நிகழ்ச்சிகளுக்கு தங்களை அனுப்பி மனம் மகிழ்ந்தவர் தலைவர் வைகோ. தங்கள் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் கட்சியில் சிலரை இழந்திருக்கிறார் தலைவர் வைகோ அவர்கள். யாருக்காகவும் எதற்காகவும் தங்களை விட்டுக் கொடுத்ததில்லை தலைவர் வைகோ அவர்கள். நீங்கள் பல கூட்டங்களில் குறிப்பிட்டதை போல குடத்தில் இட்ட விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காய் திகழ செய்தவர் தலைவர் வைகோ அவர்கள் என்பதை எவர் ஒருவரும் மறுக்க முடியாது.
கழகம் தொடங்கிய 31 ஆண்டுகளில் இளமை காலத்தில் தன்னுடைய அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்தை மறந்து, பொருளாதாரத்தை இழந்து தலைவர் வைகோ அவர்களின் லட்சிய பயணத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற உங்களைப் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இன்னும் வசந்தகாலமாய் கருதி, எதிர்பார்ப்பு இல்லாமல் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். உங்களைவிட தியாகத்தில், கழகத்தில் பயணித்து வரும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மறுமலர்ச்சி திமுகவில் ஏராளம்! ஏராளம்!
தங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபித்த நிலையிலும், அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒத்த கருத்தோடு கூறியபோது தன்னோடு பயணித்த தம்பியை மன்னிப்போம், நாளை மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் பொதுக்குழுவிலும், நிர்வாககுழு கூட்டங்களிலும் தலைவர் வைகோ அவர்கள் உங்களை உயர்த்துவதற்காகவே பாடுபட்டு இருக்கிறார், உங்களை வீழ்த்துவதற்காக அல்ல என்பதை என்னைப் போன்றோர் நேரில் கண்டிருக்கின்றனர்.
மதுரையில் நடைபெற்ற மாநாட்டு உரையில் மகாபாரத கதையில் துரோணாச்சாரியார் என்ற கதாபாத்திரத்தோடு தலைவர் வைகோ அவர்களை தாங்கள் ஒப்பிட்டு பேசி, ஒரு மாமனிதரை கொச்சப்படுத்தியது எங்கள் நெஞ்சம் இன்னும் குமறிக் கொண்டிருக்கிறது. திருப்பூர் துரைசாமி தொடங்கி பல்லடம் முத்துரத்தினம் வரை கட்சிக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டி வருகிறவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை குற்றச்சாட்டாக கூறிய போதும் இன்று வரை நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. தலைவர் வைகோ அவர்களின் மீது youtube சேனல்கள் மூலமாக கனவிலும் கண்டிராத கடும் விமர்சனங்களை கூறும் வல்லம் பஷீரை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தது ஏன்? தலைவர் வைகோ அவர்களின் சேனாதிபதி என்று கூறும் தங்களுக்கு தலைவர் வைகோ அவர்களை விமர்சனம் செய்யும் போது ஏன் கொதித்து எழவில்லை? இந்தக் கள்ள மௌனத்திற்கு தான் விடை தெரியவில்லை.

கட்சியில் உழைத்த பலருக்கு தேர்தல்களில் வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், எல்லா தேர்தல்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை ஏற்க மறுத்து தங்களின் குடும்ப உறவுகள் நேரிடையாக தலைவர் வைகோ அவர்களிடத்தில் சண்டையிட்டதை கழகத்தினர் மனதில் பசுமரத்தில் ஆணி பதிந்தது போல் இருந்து வருகிறது.
வாரிசு அரசியல் என்று கூறும் தாங்கள் மாமல்லபுரம் பேரூராட்சியில் தங்கள் துணைவியாரை பேரூராட்சி மன்ற உறுப்பினராக நிறுத்தியது ஏன்? கட்சியைச் சார்ந்த வேறு ஒருவரை நிறுத்தி இருக்கலாமே!
மகளிர் அணி நிகழ்ச்சிகளில் தங்களின் துணைவியார் பங்கேற்பதில்லை ஆகவே உள்ளாட்சியில் அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று மகளிர் அணியினர் தலைவர் வைகோ அவர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தும் தங்கள் துணைவியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தங்கள் துணைவியாரை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லும் தாங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சி மன்ற உறுப்பினராக அழைத்து வராதது ஏன்? இது என்ன அரசியல்?
திராவிட இயக்கங்களில் தலைமைக்கு பஞ்சம் வந்து விடக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்த தலைமையை அறிமுகப்படுத்தி கட்சியை வழிநடத்துவது தான் இன்றைய அரசியல் நடைமுறை. அந்த வகையில் அரசியலில் நுழைய விருப்பம் இல்லாவிட்டாலும், தலைவர் வைகோ அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கட்சி தொண்டர்களால், நிர்வாகிகளால் அழைத்துவரப்பட்ட துரை வைகோ அவர்களின் தலைமையை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்கவில்லை என்பதற்காக பல்வேறு கூட்டங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுமே சான்று.
கடந்த நிர்வாக குழு கூட்டங்களில் மாவட்ட கழக செயலாளர் தலைமைக் கழக நிர்வாகிகள் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்த போதும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் துரை வைகோ அவர்கள் அந்த மேடையிலேயே உங்களை கட்டி அணைத்து சமாதானம் செய்தார். உங்கள் அரசியலுக்கு உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் நான் இருப்பேன் என்று நிர்வாக குழு கூட்டத்திலே உரையாற்றினார். தன்னுடைய வீட்டிற்கு அழைத்து தனியாகவும் உங்களிடத்திலே பேசி உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள் என்று வெளிப்படை தன்மையோடு உங்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவரின் அரசியல் வருகையை நீங்கள் உதட்டளவில் ஏற்றுக் கொண்டீர்களே தவிர உள்ளத்து அளவில் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு பல்வேறு சான்றுகள் இருக்கின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு கழக நிர்வாகிகளிடம் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக தாங்கள் பேசியது அனைத்தும் அரசியல் உலகில் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டியது என்பதை மறுக்க முடியாது.

வாரிசு அரசியல் என்று கூறும் தாங்கள் பதவி சுகங்களால், அதிகாரங்களால் மட்டுமே இயக்கப்படும் கட்சி அல்ல மறுமலர்ச்சி திமுக. போராட்டங்களை உள்ளடக்கி கடினமான களத்தை எதிர்கொண்டு இயங்கும், மக்கள் நலன் சார்ந்த ஒரு லட்சிய பயணம் மிக்க இயக்கம் மறுமலர்ச்சி திமுக என்பதை அரசியல் உலகம் அறியும். சுகமாக அல்ல சுமை தாங்கியாக செயல்படுகிறார் துரை வைகோ அவர்கள். துரை வைகோ அவர்களை எவரும் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவரே உயரும் அளவிற்கு ஆற்றலும் திறனும் நிரம்பியவர் என்பதை அவரின் சமீப கால பணிகள் அமையும்.
காஞ்சி மண்டலத்தில் கட்சி பொறுப்புகளில் உள்ள சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்ட போதும் அவர்களை ஊக்கப்படுத்தினீர்கள், அவர்கள் பொறுப்பில் தொடர தலைவர் வைகோ அவர்களிடத்தில் சமாதானம் செய்தீர்களே தவிர, மண்டலத்தில் கட்சியை சீர்படுத்தவில்லை, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதை கழகத் தொண்டர்கள் அறிவார்கள்.
5 நாட்களாக தூக்கம் கலைந்து வாழ்கின்ற நீங்கள், 81 வயதுடைய தலைவர் வைகோ அவர்களின் தூக்கத்தை, உங்கள் தவறான, கட்சி விரோத செயல்பாடுகளால் கடந்த ஐந்து வருடங்களாக தொலைத்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து நாங்கள் குமுறுகிறோம். மூன்று நாட்களாக மௌனம் காத்த நீங்கள் உங்களுக்காக தலைவர் வைகோ அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக மௌனம் காத்திருந்தார் என்பதுதான் உண்மை. தங்கள் முகநூல் பதிவுகளும், நீலிகண்ணீரும் அரசியல் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படலாம் உண்மைதன்மை இருக்க துளியும் வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.