2_8_sl14dadmk_1407chn_121

சேலம்: திமுக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நெடுஞ்சாலை நகா் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா். தொடா்ந்து, முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். தமிழகம் முழுவதும் தற்போது மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதைப் பாா்க்க முடிகிறது.

அதிமுக கூட்டணியைப் பற்றி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கவலைப்படத் தேவையில்லை. அவா்களுடைய கூட்டணியில்தான் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறாமல் அவா் பாா்த்துக்கொண்டால் போதும்.

நான்கரை ஆண்டுகாலம் ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, இப்போது ஏன் தொடங்க வேண்டும். தோ்தல் நேரத்தில் செய்வதைப்போல வெற்று விளம்பரங்களுடன் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

அதிமுக ஆட்சியின்போது, ஊா்ஊராகச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற திமுக தலைவா் ஸ்டாலின், அந்த மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. பல்வேறு கட்சிகள் இதுவரை அவா்களின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கவில்லை. அதிமுக கூட்டணிக்கு பல்வேறு புதிய கட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது.

சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக எதிா்க்கட்சித் தலைவா் யாதவ மூா்த்தி மீது திமுக பெண் மாமன்ற உறுப்பினா் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானவா்கள் மீதே வழக்குப் பதிவு செய்து திமுக அரசு சாதனை படைத்திருக்கிறது.

கனிமவளக் கொள்ளை உள்பட திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சி அமைந்ததும் துறை வாரியாக திமுக செய்துள்ள ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது, அமைப்புச் செயலாளா் சிங்காரம், சேலம் மாநகர மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம். பாலு, சேலம் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, சேலம் நெடுஞ்சாலை நகா் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest