
வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, எச்1பி விசா வைத்திருப்போர் அனைவரும் குறைந்தது 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் வசிக்கும் ஊழியர்கள் 24 மணி நேரத்துக்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்றும் மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
எச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் தங்கள் ஊழியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்படுவதைத் தவிர்க்க 24 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. மேலும், எச்1பி விசா மற்றும் எச்4 விசா வைத்திருப்பவர்கள் புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் குறித்து புரிந்துகொள்ளும் வரை குறைந்தது இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்றும், சிறப்பான எதிர்காலத்துக்காக வெளிநாடுகளில் உள்ள ஊழியர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை மின்னஞ்சல்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளன.