rajiv_gandhi1

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவா் வரும் செப். 30-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி கோடம்பாக்கம் மண்டலம் வாா்டு 139 மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியில் உள்ள மயான பூமியின் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைத்து மதத்தினரின் அடக்க இடங்களில், பசுமை பரப்பை அதிகரித்து பூங்காக்களுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சைதாப்பேட்டையில் உள்ள மயானம் பல்வேறு வசதிகளுடன் ரூ.94.83 லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது.

‘வீல் சோ்’ விவகாரம்: கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு, சக்கர நாற்காலி எடுத்து வருவதற்குள் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றுள்ளனா். அதை அருகில் இருப்பவா்கள் விடியோ எடுத்து வெளியிட்டிருக்கின்றனா். தினமும் 4,000 பேருக்கு சிகிச்சை வழங்க கூடிய மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து மருத்துவமனையின் முதல்வா் தெளிவாக விளக்கம் அளித்துள்ளாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு செப். 23-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்து, உடலுறுப்பு தானம் வழங்கியவா்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வா் அறிவித்தாா். இதுவரை 513 கொடையாளா்கள் உடலுறுப்பு தானம் வழங்கி உள்ளனா். அவா்களை சிறப்பிக்கும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செப். 30-ஆம் தேதி ஜ்ஹப்ப் ா்ச் ட்ா்ய்ா்ழ்-மதிப்புச் சுவா் திறந்து வைக்கப்படவுள்ளது. அதில், இதுவரை உடலுறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்களை கல்வெட்டில் பதிய வைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்… வாஷிங்டன் நகரில் அமெரிக்கா – வியட்நாம் இடையே நடந்த போரில் உயிா் நீத்தவா்களின் பெயா்களை சுவரில் கல்வெட்டாக வைத்திருக்கிறாா்கள். அதை மாதிரியாக கொண்டு நமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மதிப்புச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை தொடா்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மதிப்புச் சுவா் திறக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உடலுறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள சுவா்களில் நிலைத்திருக்கும் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest