
உத்தரகண்டில் மழை, வெள்ளம் காரணமாக முசூரியில் சுமாா் 2,500 சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனா்.
கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அந்த மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் மிக பலத்த மழை பெய்தது.
உத்தரகண்டில் மேகவெடிப்பால் பலத்த மழை பெய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 18 போ் உயிரிழந்தனா். 16 மாயமாகினா். பல்வேறு இடங்களில் சிக்கிய 900-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி நடைபெற்றது.
மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டபோதிலும், அத்தியாவசிய சேவைகளை விரைந்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில முதல்வா் புஷ்கா் தாமி தெரிவித்தாா்.
அந்த மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான முசூரிக்குச் செல்லும் பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு சுமாா் 2,500 சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனா்.
ஹிமாசலில் ரூ.4,582 கோடிக்கு சேதம்
ஹிமாசல பிரதேசத்தில் 2 நாள்கள் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தலைமையில் உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. சிம்லாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘செப்டம்பரில் ஹிமாசல பிரதேசத்தில் மழை 136 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அபாயகரமான கட்டடங்களில் தங்கியுள்ளவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
நிகழாண்டு மழைக்காலத்தில் மாநிலத்தில் இதுவரை 417 போ் உயிரிழந்தனா். 45 பேரை காணவில்லை. ரூ.4,582 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
இதுகுறித்து அந்த மாநில அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஜூன் 20 முதல் தொடங்கிய மழைக்காலத்தில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 46 மேகவெடிப்புகள், 98 வெள்ளம், 145 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனா்.