car

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது.

உத்தரகண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 15 பேரும், ஹிமாசலில் வீடு இடிந்து 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்டில்…: உத்தரகண்ட் தலைநகர் டேராடூன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகவெடிப்புகளால் திங்கள்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம்-நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள், கடைகள், சாலைகள், பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

வெவ்வேறு சம்பவங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 15 பேர் உயிரிழந்தனர். 16 பேரைக் காணவில்லை; பல இடங்களில் சிக்கித் தவிக்கும் 900-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

டேராடூன் மாவட்டத்தின் சஹஸ்திரதாரா, மால்தேவ்தா, சாண்ட்லா தேவி, தாலன்வாலா ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் சஹஸ்திரதாராவில் 192 மி.மீ., மால்தேவ்தாவில் 141 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆறுகளில் வெள்ளம்: தம்சா, கங்கை, யமுனை ஆகிய நதிகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில், பல பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தம்சா நதிக்கரையில் உள்ள புகழ்பெற்ற தபகேஸ்வர் கோயிலை செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளம் சூழ்ந்தது.

“கடந்த 30 ஆண்டுகளில் இந்த அளவுக்கு நீர் அளவு உயர்வைப் பார்த்ததில்லை; வெள்ளம் சூழ்ந்தபோது கோயிலில் மிகக் குறைவான பக்தர்களே இருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’ என்று கோயில் அர்ச்சகர் பிபின் ஜோஷி கூறினார்.

டேராடூனில் உள்ள தேவபூமி கல்வி நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு சிக்கித் தவித்த 500 மாணவர்களை மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர். டேராடூனின் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் பல்வேறு அலுவலகங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.

முதல்வர் நேரில் ஆய்வு: மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உள்ளூர் எம்எல்ஏக்கள், மூத்த அதிகாரிகளும் உடன் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பலத்த மழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அணுகு சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் உறுதி செய்யப்படும்’ என்றார்.

உத்தரகண்ட் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் தாமி தொலைபேசி வாயிலாக எடுத்துரைத்ததாக அவரது அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலில்…: ஹிமாசல பிரதேச தலைநகர் சிம்லா, மண்டி, சுந்தர்நகர், காங்ரா உள்பட பல இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மண்டியின் பிரக்தா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள், ஒரு குழந்தை என மூவர் உயிரிழந்தனர்.

தரம்பூர் பகுதியில் பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள்-கடைகள் சேதமடைந்தன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 650 சாலைகள் மூடப்பட்டுள்ளன. நடப்பு பருவமழைக் காலத்தில், ஹிமாசலில் மழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 412 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் பீட், நாந்தேட், ஜால்னா, அஹில்யாநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

மழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் பீட் மாவட்டத்தில் இருவரும், நாகபுரியில் ஒருவரும் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தேசிய-மாநில பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, தீயணைப்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest