C_53_1_CH1509_39217913

காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை, காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில், அவர் சுவர் ஏறிக் குதித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஸ்ரீநகரில் அமைந்துள்ள தியாகிகன் நினைவிடத்துக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தச் சென்றார். நேற்று அவர் சென்றபோது, தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் காவல்துறையினர், அவரை நினைவிடத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி நுழைவாயிலைப் பூட்டியிருந்தனர்.

நேற்று முதல், வீட்டுக் காவலில் உமர் அப்துல்லா வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நினைவிடத்துக்குச் செல்ல முடியாமல் அவர் தடுக்கப்பட்டதால், உடனடியாக அவர் சுவர் ஏறிக் குதித்து நினைவிடத்துக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார்.

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்துச் செல்லும் விடியோ, இன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதலில், அவரைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், அவர் திடீரென சுவர் ஏறிக் குதிப்பதைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தியாகிகள் நாளை முன்னிட்டு, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதால், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், நினைவிடத்துக்கு வந்தேன். அப்போது, தன்னை காவலர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்யப்படுவதாகக் கூறுகிறார்கள். எந்த சட்டத்தின் கீழ் நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தெரிவிக்க வேண்டும். இது சுதந்திர நாடு என்று கூறுகிறார்கள். ஆனால், எங்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த நினைவிடம் எப்போதுமே இங்குதான் இருக்கிறது. நேற்று தடுத்துவிட்டார்கள். எத்தனை நாள்களுக்குத்தான் தடுத்துவைக்க முடியும் என்றும் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest