
உயிரி எரிபொருள் பயன்பட்டால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்வைக்கப்படும் கூற்றை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திட்டவட்டமாக மறுத்தாா்.
கரும்பு அல்லது உணவு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 20 சதவீதம் கலந்து பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் தனியாா் நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்திர எரிசக்தி மாநாட்டில் பங்கேற்று, ஹா்தீப் சிங் பேசியதாவது:
வாகன இன்ஜின்களுக்கு உயிரி எரிபொருள் தீங்கு விளைவிப்பதாக கதைகளைக் கேட்கிறோம். அவை அடிப்படையற்றவை. என்ன அா்த்தத்தில் அவ்வாறு கூறுகின்றனா் என்பது தெரியவில்லை.
கடந்த 2014-இல் பெட்ரோல் உடனான எத்தனால் கலப்பு 1.4 சதவீதமாக இருந்தது. தற்போது 20 சதவீதமாக உள்ளது. பெட்ரோலுடன் 20 சதவீத உயிரி-எத்தனால் கலப்பு முற்றிலும் பாதுகாப்பானது; சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பழைய வாகனங்களில் மட்டும் சில ரப்பா் பாகம் மற்றும் கேஸ்கெட் மாற்ற வேண்டியிருக்கும். அதுவும் எளிய நடைமுறையே.
தனது எரிபொருள் தேவையில் 88 சதவீதம் இறக்குமதியை சாா்ந்திருக்கும் ஒரு நாட்டுக்கு உயிரி எரிபொருள் மற்றும் பசுமை எரிபொருளின் தேவை காலத்தின் கட்டாயமாகும். சா்வதேச எரிசக்தி முகமை கணிப்பின்படி, உலகளாவிய எரிபொருள் தேவை அடுத்த 20 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரிக்கும். இதில் 25 சதவீத அதிகரிப்பு இந்தியாவினுடையதாக இருக்கும் என்றாா் அவா்.
எரிபொருள் இறக்குமதி குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு ஆகிய நோக்கங்களுடன் பெட்ரோல்-உயிரி எத்தனால் கலப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் தற்போது 90,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இ-20 (80 சதவீத பெட்ரோல்-20 சதவீத எத்தனால்) பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
உலகிலேயே முதல் முறையாக மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் அதிநவீன ஆலை, அஸ்ஸாமில் ரூ.5,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை அண்மையில் பிரதமா் மோடி திறந்துவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.