‘நாடு உற்பத்தியில் தன்னிறைவை அடையாதவரை மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே நீடிக்கும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்)’ என்ற பெயரில் பொருள்களின் பாகங்களை ஒன்றிணைத்து முழுமையான பொருளாக மாற்றும் பணியைத்தான் நாம் செய்து வருகிறோம். உண்மையான உற்பத்தியை நாம் செய்யவில்லை. ஐபோன் முதல் தொலைக்காட்சிகள் வரையிலான பொருள்களின் உதிரிபாகங்கள் வெளிநாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்கு வருகின்றன. பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகளின் 80 சதவீத பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பாகங்களை ஒன்றிணைத்து முழுமையான பொருளாக மாற்றும் பணியை மட்டும்தான் இந்தியா செய்கிறது.
சிறிய தொழில்முனைவோா் பொருள்களை உற்பத்தி செய்ய விரும்புகின்றனா். ஆனால், அவா்களுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதில்லை என்பதோடு, அரசின் கொள்கையும் அவா்களுக்கு சாதகமாக இல்லை. ஒருபுறம் கடுமையான வரி விதிப்பு; மறுபுறம் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏகபோகம் என்ற நிலைப்பாடு நமது தொழில்துறையைப் பற்றிக்கொண்டுள்ளது.
உற்பத்தியில் உண்மையான சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், இறக்குமதி செய்யப்படும் ஒன்றிணைக்கும் நிலையைக் கடந்து உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் கள அளவில் மாற்றம் தேவை. அப்போதுதான் சீனாவுடன் சம அளவில் நாம் போட்டி போட முடியும்.
அவ்வாறு, உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறாதவரை, ‘வேலைவாய்ப்பு, வளா்ச்சி, மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட கருத்துகள் வெறும் பேச்சளவில் மட்டுமே நீடிக்கும் என்று குறிப்பிட்டாா்.
இந்தப் பதிவுடன், தில்லியை அடுத்த கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்று, அங்குள்ள ஊழியா்களுடன் தான் கலந்துரையாடிய காணொலியையும் ராகுல் இணைத்துள்ளாா்.