
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளூர் விமானம் என நினைத்து, செளதி அரேபியா சென்ற சம்பவம் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரில் இருந்து கராச்சி செல்ல, விமானம் இவ்வளவு நேரம் பறக்கிறதே என சக பயணிகளிடம் கேட்டபோதே அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது.
விமான டிக்கெட் பரிசோதனைக் குழுவினர் டிக்கெட்டை பரிசோதனை செய்து அனுப்பியதில் அலட்சியத்துடன் செயல்பட்டதால், கடவுச்சீட்டு கூட இல்லாமல் அவர் தவறுதலாக செளதி வரை சென்றுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாஸேன் என்ற இளைஞர் லாகூரில் இருந்து கராச்சி செல்வதற்காக உள்ளூர் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால், உள்ளூர் விமான முனையத்தில் அருகருகே இரண்டு விமானங்கள் இருந்ததால், அவர் தவறான விமானத்தில் ஏறியுள்ளார்.
ஆனால், இடையே டிக்கெட் பரிசோதனைக் குழுவினரும் விமானப் பணியாளர்களும் டிக்கெட்டை பரிசோதனை செய்தே அவரை இருக்கையில் அமரவைத்துள்ளனர்.
தனது தவறை அங்கிருந்த பணியாளர்கள் சுட்டிக்காட்டத் தவறிவிட்டதால், பெரும் துன்பத்தை அனுபவித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கராச்சிக்கு செல்ல விமானம் நீண்ட நேரமாக பறப்பதாக சக பயணிகளிடம் கேட்டபோது, அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அவரிடம் உண்மையைக் கூறியுள்ளனர். இந்த விமானம் செளதி அரேபியா செல்வதாகவும், அதனால் நீண்ட நேர பயணம் எடுத்துக்கொள்ளும் விமானம் இது எனவும் சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகே ஷாஸேனுக்கு உண்மை தெரியவந்துள்ளது. தான் செய்த தவறை விமான டிக்கெட் பரிசோதகர்கள் யாரும் சுட்டிக்காட்டவில்லை எனக் குறிப்பிட்டு, பணியாளர்கள் மீது குற்றம் சாட்டி விமான நிறுவனத்துக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயண செலவுகளை திரும்பத் தர வலியுறுத்தியும், இதனால் ஏற்பட்ட அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு கோரியும் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதையும் படிக்க | மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !