
உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எஃப்.சியில் தற்காலிகமாக சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை செல்லும் பாதையில் அக்கடை அமைந்துள்ளதால், சைவ உணவுகள் மட்டுமே என்ற பலகை அக்கடையின் கதவில் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்து மதத்தைச் சேர்ந்த ரக்ஷா தள அமைப்பைச் சேர்ந்தவர்கள், இறைச்சி உணவு விற்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அக்கடையின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள முக்கிய சாலையில் கே.எஃப்.சி உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. மொறுமொறுப்புத் தன்மையுடன் கோழி இறைச்சியை விற்பனை செய்வதில் புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை மற்றும் சாவன் மாதத்தையொட்டி இப்பகுதியில் இறைச்சி உணவை விற்பனை செய்யக்கூடாது என ரக்ஷா தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையில் உள்ள இறைச்சி உணவை முற்றிலுமாக எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக தற்போது அக்கடையில் இருந்து இறைச்சி உணவு தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ளது. சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என அக்கிளை சார்பில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அக்கிளை தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி நடைபெறாது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!