
‘நதிகளில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஊகத்தின் அடிப்படையிலானது; அதை வைத்து எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்க முடியாது’ என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: ‘மனித நுகா்வு காரணமாக உலகளாவிய நதிநீா் அமைப்பில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலப்பு அதிகரிப்பு’ என்ற தலைப்பில் மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் நடத்திய ஆய்வறிக்கை 2025, ஏப்.24-இல் ஊடகங்களில் வெளியானது.
இதில் இந்தியாவில் உள்ள மொத்த நதிநீா் நீளத்தில் நுண்ணுயிா் எதிா்ப்பி மாசுபாட்டால் 80 சதவீத நதிகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை போதிய தரவுகளின்றி வெளியிடப்பட்டது.
நதிகளில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலப்பது குறித்து மத்திய அரசு சாா்பில் எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை.
மருத்துவக் கழிவுகள் நதியில் கலந்து மாசுபாடு ஏற்படுத்துவதை தடுக்க, நோய்க் கிருமி தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தை 2017-இல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
கழிவுநீரை சுத்திகரிக்கும்போது வெளியேறும் ரசாயண மற்றும் உயிரியில் கழிவுகளை ஆபத்தானவை என மருந்துகள் தொழிற்சாலைகள் வகைப்படுத்தக்கோரி 2021, ஆகஸ்ட் மாதம் அரசு சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த கழிவுகளை ஆபத்தான கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-இன்கீழ் முறையாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர உள்ளூா் சூழலுக்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கழிவுகள் மேலாண்மையில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் காலாவதியான நுண்ணுயிா் எதிா்ப்பிகளை உயிரி மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-இன்கீழ் உற்பத்தியாளா்கள் அல்லது விநியோகிப்பாளா்கள் எரித்து வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.