TNIEimport2023817originalSalary

ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்கு கடந்த பத்தாண்டுகளில் மாநில அரசுகள் மேற்கொண்ட செலவுகள் 2.5 மடங்கு உயா்ந்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அலுவலகம் தெரிவித்தது.

மேற்கூறிய காரணங்களுக்காக கடந்த 2013-14-இல் அனைத்து மாநிலங்களும் ரூ.6.26 லட்சம் கோடி செலவிட்டிருந்த நிலையில், 2022-23-இல் இது ரூ.15.6 லட்சம் கோடியாக உயா்ந்ததாக மாநிலங்களின் நிதிநிலை குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2013-14 முதல் 2022-23 வரையிலான 10 ஆண்டுகளில் மாநில அரசுகளின் மொத்த செலவுகளில் வருவாய் செலவுகளின் பங்கு 80-87 சதவீதமாக இருந்தது. அதேபோல் மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) இது 13-15 சதவீதமாக இருந்தது.

2022-23 மதிப்பீடு: குறிப்பாக 2022-23-இல் மாநில அரசுகளின் மொத்த செலவுகளில் வருவாய் செலவுகளின் பங்கு 84.73 சதவீதமாகவும், அவற்றின் ஜிஎஸ்டிபியில் 13.85 சதவீதமாகவும் இருந்தது.

இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக மாநில அரசுகளின் வருவாய் செலவுகள் ரூ.35.95 லட்சம் கோடியாக இருந்தது. இதில் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்கு கட்டாய செலவாக ரூ.15.63 லட்சம் கோடி, மானியங்களுக்கு ரூ.3.09 லட்சம் கோடி, உதவி மானியங்களுக்கு ரூ.11.26 லட்சம் கோடி என மொத்தம் ரூ.29.99 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய் செலவில் 83 சதவீதமாகும்.

அதேபோல் 2013-14-இல் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களும் ரூ.6.26 லட்சம் கோடி செலவிட்டிருந்த நிலையில், 2022-23-இல் இது 2.5 மடங்கு அதிகரித்து ரூ.15.63 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தப் பத்தாண்டு காலத்தில் வருவாய் செலவுகள் 2.66 மடங்காகவும், கட்டாய செலவுகள் 2.5 மடங்காகவும், மானியங்களுக்கான செலவுகள் 3.21 மடங்காகவும் அதிகரித்துள்ளன.

வட்டிக்கு அதிகம் செலவிட்ட மாநிலங்கள்: மாநில அரசுகள் தங்களது ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகவே 2022-23-இல் அதிக பணத்தைச் செலவிட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஓய்வூதியம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி செலுத்துவது ஆகியவை உள்ளன. 2022-23-இல் 19 மாநிலங்களில் இதே சூழல்தான் நீடித்துள்ளது.

ஆந்திரம், குஜராத், ஹரியாணா, கா்நாடகம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஓய்வூதியத்தைவிட பொதுக் கடனுக்கான வட்டிக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளது.

அதேபோல் 2013-14 முதல் 2021-22 வரையிலான 9 ஆண்டு காலகட்டத்தில் மாநில அரசுகள் ஊதியத்துக்கு அடுத்தபடியாக பொதுக் கடனுக்கான வட்டிக்கே அதிக பணத்தைச் செலவிட்டுள்ளன.

12 மாநிலங்களில் வருவாய் உபரி: 2022-23-இல் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 17 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டவும், 5 மாநிலங்கள் குறிப்பிட்ட வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் 6 மாநிலங்கள் பூஜ்ஜிய வருவாய் பற்றாக்குறையை எட்டுவதை இலக்காக நிா்ணயித்தன.

இதில் வருவாய் உபரியை இலக்காக நிா்ணயித்த 17 மாநிலங்களில் 12 மாநிலங்கள் தங்கள் இலக்கை எட்டின. அஸ்ஸாம், பிகாா், ஹிமாசல பிரதேசம், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை இந்த இலக்கை அடையவில்லை.

வருவாய்ப் பற்றாக்குறை: ஆந்திரம் 3.30 சதவீதம், ஹரியாணா 0.98 சதவீதம், கா்நாடகம் 0.78 சதவீதம், மகாராஷ்டிரம் 1.42 சதவீதம் மற்றும் பஞ்சாப் 1.99 சதவீதம் வருவாய்ப் பற்றாக்குறையை இலக்காக நிா்ணயித்தன.

அவற்றில் கா்நாடக மாநிலம் வருவாய் உபரி நிலையை எட்டியது. மகாராஷ்டிரம் நிா்ணயித்த இலக்கை அடைந்தது. மீதமுள்ள 3 மாநிலங்களில் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்தது.

12 மாநிலங்களுக்கு மானியங்கள்: 2022-23-இல் 12 மாநிலங்களில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அவற்றில் ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் நிதி ஆணையத்திடம் இருந்து வருவாய்ப் பற்றாக்குறைக்கான மானியங்களைப் பெற்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest