நமது நிருபர்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
சேலம் தொகுதி திமுக உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “இத்திட்டத்திற்கு 2024-25 நிதியாண்டில் ரூ.86,000 கோடியும், 2025-26 -இல் ரூ.86,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடிமட்ட அளவில் வேலைவாய்ப்புக்கான தேவையை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்படும்போது நிதி அமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதி கோரப்படுகிறது.
எனவே மன்ரேகா திட்டத்தை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளார்.
நிலுவைத் தொகை: தேனி தொகுதி திமுக உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், “2024-2025 நிதியாண்டிற்கான மன்ரேகா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ரூ.4,034 கோடி நிலுவைத் தொகையை அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்பது உண்மையா?’ என்று கேட்டிருந்தார்.
இதற்கு மக்களவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், “தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ஊதியப் பொறுப்பு ரூ.2884.16 கோடி 2025, ஏப்ரலில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
31.03.2025 நிலவரப்படி பொருள் கூறுகளுக்கான மொத்த நிலுவையில் உள்ள பொறுப்பான ரூ.858.66 கோடிக்கு எதிராக, நிலுவையில் உள்ள பொறுப்பில் 50 சதவீதம் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.