
பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
புத்த கயா பகுதியில், ஜூலை 24ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், ஊர்காவல் படைத் தேர்வுக்கு உடற்தகுதித் தேர்வின்போது 29 வயது பெண் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், உடல்தகுதி தேர்வின்போது, பெண் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஆம்புலன்ஸில், தான் மயக்கமுற்று இருந்தபோது, சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம்சாட்டியிருக்கிறார். பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் செய்துசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமையை உறுதி செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் திருப்தியில்லை என்றும் மேற்கொண்டு தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிகாரில் இதுபோன்ற சம்பவங்கள், சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு உதாரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.