
அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வெளியுறவு அமைச்சகம் எதிர்வினையாற்றியுள்ளது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க எச்-1பி விசா திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து, இதனால் முழுமையாக ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள துறைகள் பல, புத்தாக்கம் மற்றும் புதுமையில் பங்குள்ள நிலையில், அவர்களுடனும் கலந்தாலோசிக்கப்படும்.
திறன் வாய்ந்த தரப்பினர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தொழில்நுட்ப மேம்பாடு, புத்தாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகிய பலவற்றுக்கு மிகப்பெரியளவில் பங்களிப்பு நல்கியுள்ளனர்.
இந்த நிலையில், கொள்கை வகுப்பாளர்கள், இரு நாடுகளிலும் உள்ள மக்களுக்கிடையிலான வலுவான உறவுகளை உள்ளடக்கிய பரஸ்பர பலனளிக்கும் நலன்களையும் கருத்திற்கொண்டு, அண்மையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்துகொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கையானது, மனிதாபிமான அடிப்படையில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் குறிப்பாக, குடும்பங்கள் பலவற்றுக்கு ஏற்படுத்தியுள்ள சிதைவால் பின்விளைவுகள் ஏற்படும்.
இந்த நிலையில், இவையனைத்தும் அமெரிக்க அதிகாரிகளால் பொருத்தமாக கையாளப்படும் என்று அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.