
பானிப்பூரி வட இந்தியாவில் மிகவும் பிரபலம். அதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். மாலையாகிவிட்டால் அப்படியே கூட்டமாகச் சென்று பானிப்பூரி சாப்பிடுவது வழக்கம். குஜராத் மாநிலத்தில் 2 பானிப்பூரி குறைவாகக் கொடுத்ததாகக் கூறி பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து அழுது அடம்பிடித்த காட்சி வைரலாகி இருக்கிறது. அங்குள்ள வதோதராவில் சுர்சாகர் ஏரி அருகில் பானிப்பூரி வியாபாரி ஒருவர் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார்.
அங்கு பெண் ஒருவர் பானிப்பூரி சாப்பிட வந்தார். வியாபாரி 20 ரூபாய்க்கு 6 பானிப்பூரி கொடுத்து வந்தார். 20 ரூபாய்க்கு அப்பெண் பானிப்பூரி சாப்பிட ஆரம்பித்தார். வியாபாரியிடம் வேறு சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பானிப்பூரியாக வியாபாரி கொடுத்துக்கொண்டே இருந்தார். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பானிப்பூரியைக் கொடுத்துவிட்டு எண்ணிக்கை முடிந்ததாக வியாபாரி தெரிவித்தார். ஆனால் அப்பெண் தனக்கு 4 பூரிதான் கிடைத்தது என்று தெரிவித்தார்.
ஆனால் வியாபாரி 6 பானிப்பூரி கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் வியாபாரி 6 பானிப்பூரி கொடுத்துவிட்டேன் என்று உறுதியாக சொன்னார்.

இதனால் கோபம் அடைந்த அப்பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார். எனக்கு மேலும் 2 பானிப்பூரி கொடுத்தால்தான் ரோட்டில் இருந்து எழுவேன் என்று கூறி நடுரோட்டில் அமர்ந்துவிட்டார். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை அப்படியே நிறுத்தினர். இதனால் அப்பெண்ணைச் சுற்றி கூட்டம் கூடியது.
வாகன ஓட்டுநர்கள் இறங்கி வந்து அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனக்கு மேலும் 2 பூரி கிடைக்காதவரை எழுந்திருக்க மாட்டேன் என்று கூறி அடம்பிடித்து சாலையில் அமர்ந்து இருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவலர்கள் வந்தனர். போலீஸார் வருவதைப் பார்த்த அப்பெண் கதறி அழ ஆரம்பித்தார். போலீஸாரிடம் தனக்கு வியாபாரியிடமிருந்து 2 பானிப்பூரியை வாங்கிக்கொடுக்கும்படி கேட்டு அடம்பிடித்தார்.
போலீஸார் பேசிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. இதனால் அப்பெண்ணை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். அதன் பிறகுதான் போக்குவரத்து சரியானது. அப்பெண் பானிப்பூரிக்காக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.