68d71a6eac232

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவியைப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் அமைதி காத்து வருகிறார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “கட்சியின் எதிர்கால நலன் கருதியே அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினேன். ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என் ஆதரவாளர்கள் நீக்கப்படுவதை அவர்கள் செய்துகொண்டேதான் இருப்பார்கள். ஆனால், விரைவில் நன்மை நடக்கும். அவர்களது நடவடிக்கை அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது; தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனது அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி. ஒருங்கிணைப்பு குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வருகை குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அன்று நான் சென்னை சென்று விட்டேன். எனக்கு வழிகாட்டி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாதான். அவர்கள் வழியில் நான் பயணித்து வருகிறேன்” என்றார்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest