
எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.

இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்த பெர்பார்மென்ஸை கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய அக்காவுக்கு சமர்பிப்பதாக உருக்கமாக கூறியிருந்தார்.
ஆகாஷ் தீப் பேசியதாவது, ‘நான் இதை எங்கேயுமே சொன்னதில்லை. என்னுடைய அக்கா கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அதை கண்டறிந்தோம். அவளுக்கு இப்போது பரவாயில்லை. உடல்நிலை சீராக இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக மனரீதியாக அவள் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டாள்.

இந்த வெற்றி உனக்கானதுதான் அக்கா. பந்தை கையில் எடுக்கும்போதெல்லாம் உன்னுடைய முகம்தான் எனக்கு நியாபகம் வரும். உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த பெர்பார்மென்ஸை கூட உனக்காகத்தான் சமர்பிக்கிறேன். நாங்கள் எல்லோரும் உன்னுடன் இருக்கிறோம்.’ என நெகிழ்ச்சியோடு உருக்கமாக பேசியிருந்தார்