E0AE8EE0AEA9E0AF8D-E0AEA4E0AEBFE0AEB0E0AF81E0AEAEE0AEA3E0AEAEE0AF8D

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளிக்கொணர்ந்த விகடனுக்கு என் நன்றி.

எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பெண்கள். ஒரு ஆண் பிள்ளை. அண்ணா குடும்பத்தில் மூத்தவர். என் தந்தை எங்கள் திருமணங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் எங்கள் திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அண்ணா எந்தப் பிரச்னை வந்தாலும் ‘No Problem”  என சொல்பவர்.. நிதானமாகப் பிரச்னைகளை கையாள்வார். நாங்கள் அனைவருமே அரசாங்க அலுவலகங்களில் பணி புரிந்து கொண்டிருந்தோம். 

என் கணவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அப்போது தான் ஹைதராபாதில் ஒரு பொதுத்துறை அலுவலகத்தில் சேர்ந்திருந்தார். என்னைப் பெண் பார்க்க வருவதாகச் சொன்ன தினத்தன்று அலுவகத்திலிருந்து நான் வேண்டுமென்றே தாமதாகத்தான் வந்தேன்.

ஏனென்றால் என் நெருங்கிய தோழி திருமணம் செய்து கொள்ளவில்லை. நானும் திருமணம் வேண்டாம் என இருந்தேன். என் வீட்டில் என் கணவரும் அவர் பெரியப்பா மகனும் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்து விட்டு கிளம்பி விட்டார்கள் ஒன்றும் சொல்லவில்லை..

எங்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை பார்த்தது என் இரண்டாவது அக்காவும் அவள் கணவரும் தான். அவர்கள் தினமும் என் கணவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று வந்தனர். எனக்கு வெறுப்பாக இருந்தது. என் கணவர் .தன் வேலை நிரந்தரமானவுடன் தான் கல்யாணம் எனச் சொன்னதால்  நிச்சயமாகி ஆறு மாதங்கள் கழித்து தான் திருமணம்.

நான் அப்போது என் அக்காவின் கணவரிடம் என் கணவர் அலுவலகத்தில் அதிகாரியாகத்தான் இருக்கிறாரா, அவர் சம்பளம் போன்ற விவரங்களை அறியுமாறு சொன்னேன். அவர் கணவர் அலுவலகம் சென்று விசாரித்து வந்தார். அங்கு ரிசப்சஷனில் இருந்த பெண் என் கணவரிடம் சொல்ல உடனே என் கணவரும் அவர் அலுவலக PRO வை என் ஆபிஸுக்கு அனுப்பினார். அவரும் திரும்பி வந்து ‘அந்தப் பெயரில் ஒருவரும் வேலை செய்யவில்லை” என்று சொல்லியிருக்கிறார். பிறகு தானே வந்து verify செய்ததாக திருமணத்திற்குப் பிறகு சொன்னார்.

என் திருமண நாளன்று நடந்த ரகளைகளை மறக்க முடியுமா!  திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டார்  உறவினர், நண்பர்கள் என ஐம்பது பேர்கள் வரை டெல்லியிலிருந்து வந்திருந்தனர். திருமண தினத்தன்று காலை சமையல் செய்பவர் வெளியே நின்றிருந்த என் கணவரை, மாப்பிள்ளை என்று தெரியாமல் எதையோ எடுத்து வரச் சொல்ல ஆரம்பமாகியது பிரச்னை.

பின் காலை டிபன் பரிமாறும் போது இட்லி மிளகாய் பொடியில் நல்லெண்ணைக்குப் பதிலாக சுட்ட எண்ணெயை பரிமாறுபவர் விட்டு விட கோபத்தில் சிலர் சாப்பிடாமல் எழுந்து விட்டனர். முகூர்த்த நேரம் நெருங்கிய போது அடுத்த பிரச்னை என் கணவரின் சித்தி ரூபத்தில் வெடித்தது. .வைத்த சீர் வகைகளில் வெள்ளி சொம்பு இல்லை.

வெள்ளி சொம்பு தங்கள் வீட்டு வழக்கப்படி வைக்க வேண்டும் என அவர் சித்தி சொல்வதாக செய்தி வர, என் அம்மா ‘அவர்கள் கொடுத்த லிஸ்ட்படி எல்லாம் வைத்து விட்டோமே என்று சொன்னார்.

என் சித்தப்பா ‘விடு பெரிசு பண்ணாதே எனச் சொல்லி வெள்ளிக் கடைக்கு ஒரு ஆளை அனுப்பினார். அன்று விடுமுறை தினமாகையால் கடைகள் திறக்கவில்லை. எங்கெல்லாமோ அலைந்து சொம்பை வாங்கி வந்தார்.. 

சகோதரி வீட்டுத் திருமணம்

எனக்கோ ஒரே எரிச்சல். கல்யாணமும் வேண்டாம். ஒரு சடங்கும் வேண்டாம் என வெறுப்பாக இருந்தது. சண்டை போடுவதற்கென்றே சிலர்  வருவார்கள் போலிருக்கிறது.  அடுத்தது எங்கள் வீட்டுத் திருமணங்களில்   ரிசப்ஷன வைத்தது கிடையாது., கணவர் வீட்டில் ‘ரிசப்ஷன் வைக்க வேண்டும் அதுவும் நார்த் இண்டியன் உணவுகள் ரிசப்ஷனில் இடம் பெற வேண்டும்’ என்று சொல்லியிருந்தார்கள். நல்லவேளை என் கணவரின் உறவினர் தானே முன் வந்து வட இந்திய உணவுக்கு ஏற்பாடுகள் செய்தார். 

ரிசப்ஷனன்று மாலை என் அக்கா எனக்கு ஹேர் ஸ்டைல் செய்து கொண்டிருந்தாள். அப்போது விளையாடிக் கெண்டிருந்த அவளின் மகள் கீழே விழுந்து முகத்தில் அடிபட்டு ரத்தம் வர, பதறிய அக்கா குழந்தையை கவனிக்க ஓடினாள். நான் பாதி ஹேர் அலங்காரத்தில் நின்று கொண்டிருந்தேன்.

ரிசப்ஷன் நேரம் நெருங்கி விடவே ஒவ்வொருவராக வரத் தொடங்கி விட்டார்கள். பிறகு வேறொரு பெண்மணியின் உதவியால் ஒரு வழியாகத் தயாரானேன். என் திருமண புகைப்படங்களில் கூட நான் கோபமாக முறைத்துக் கொண்டிருப்பேன். ம்…. அது ஒரு காலம்!

சமீபத்தில் நடந்த என் சகோதரி வீட்டுத் திருமணத்தில் இரு வீட்டினரும் சமமாகப் பொறுப்புக்களை ஏற்று ஒரு குறையிமின்றி நடத்தினர்.. மனதுக்கு நிறைவாக இருந்தது. இப்போது நடைபெறும் திருமணங்களில் இரு வீட்டினரிடையேயும் நல்ல புரிதல் ,விட்டுக்கொடுத்தல், Ego இல்லாமல் பொறுப்புக்களை சமமாக ஏற்பது போன்றவைகளால் சந்தோஷமாக மற்றும் மனநிறைவுடன் நடைபெறுவதைப் பார்க்கிறேன். இது வரவேற்கத்தக்க மாற்றம்.

வி. ரத்தினா

ஹைதராபாத்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest