
டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அதனை மாணவியுடன் தங்கி இருந்த தோழி கண்டுபிடித்து போலீஸாரிடம் கொடுத்தார்.
அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு பேராசிரியர்கள் சாய்ரி, மகேந்திர சிங் ஆகியோர்தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மாணவி ஜோதியின் தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இரண்டு பேராசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.
இது தவிர பல்கலைக்கழக டீன் உள்பட மேலும் 4 பேர் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மாணவி தனது கடிதத்தில், இரண்டு பேராசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும், அவர்கள் சிறைக்குச் செல்லவேண்டும். அவர்கள் என்னை மனரீதியாக சித்ரவதை செய்தனர். அவர்கள் இரண்டு பேரால்தான் நான் நீண்டநாள்களாக மன அழுத்தத்தில் இருக்கிறேன்.
நான் அனுபவித்தது போன்ற ஒன்றை அவர்களும் அனுபவிக்கவேண்டும். என்னால் இந்த சூழ்நிலையில் மேற்கொண்டு வாழ முடியாது. எனது சாவுக்கு இரண்டு பேராசிரியர்களும்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பு மாணவியிடம் மூன்று பேர் உனது ப்ராஜெக்டுக்கு ஒப்புதல் கொடுக்கமாட்டோம் என்றும், உன்னை தேர்வு எழுதவிடமாட்டோம் என்று கூறி மிரட்டி இருக்கின்றனர்.
அதோடு அவர்கள் அளவுக்கு அதிகமாக புகார் செய்து வருவதால் நீ தண்டிக்கப்படவேண்டும் என்று மாணவியிடம் தெரிவித்துள்ளனர்.
மாணவி மன அழுத்ததில் இருப்பது குறித்து அவரது தந்தை பல்கலைக்கழக டீனை சந்தித்து பேசி இருந்தார். அப்போது மாணவிக்கு எந்த வித கெடுதலும் நடக்காது என்று டீன் சித்தார்த் உறுதியளித்துள்ளார். அப்படி இருந்தும் அடுத்து வந்த நாள்களில் மாணவி தொடர்ந்து துன்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
