medical_counselling_neet

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் புதன்கிழமை (ஆக.6) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

திங்கள்கிழமை (ஆக.4) மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த அவகாசம் வரும் புதன்கிழமை காலை 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 7-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 8-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆக. 8 முதல் 13-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest