
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தமிழ்நாடு அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது, அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உரையில் எம்.ஜி.ஆர் பற்றியும் குறிப்பிட்டேன். எம்.ஜி.ஆர் மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டியுள்ளேன். தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் பேசினேன். எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாகவும், அவருடைய முயற்சியாகவும் உள்ளது.

அது, அவருடைய தனிப்பட்ட விருப்பம். தி.மு.க கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனால், அது கூட்டணி உறவை சிதைக்கும் அளவு இருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. தி.மு.க கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என எந்த பொருளில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்பதை அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். எம்.ஜி.ஆரை ஒரு ஜாதிக்குள் நான் சுருக்கவில்லை. தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க இயங்கியது. அது, கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக நான் கூறினேன். ஜெயலலிதா தன்னை பார்ப்பன பெண் என சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறினார். அதனால், பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீயம் உள்ளிட்டோர் கலைஞரை எதிர்த்த அளவிற்கு அ.தி.மு.க-வையோ, எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ எதிர்க்கவில்லை என்பதை தான் நான் கூறினேன். மற்றபடி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் ஜாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.