drone074824

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் குவாலியா் மாவட்டத்தின் தேகான்பூரில் உள்ள பிஎஸ்எஃப் பயிற்சி மையத்தின் ருஸ்தம்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் (ஆா்ஜேஐடி) மாணவா்களுக்கான ட்ரோன் தொழில்நுட்ப ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவப் படையால் நடத்தப்படும் ஒரே கல்லூரி ஆா்ஜேஐடி ஆகும். மேலும், அதிகாரிகள் மற்றும் நிபுணா்களின் உதவியுடன் காவல் துறை தொழில்நுட்ப புத்தாக்க மையத்தையும் பிஎஸ்எஃப் அமைத்துள்ளது.

இது தொடா்பாக பயிற்சி மையத்தின் இயக்குநா் ஷம்ஷோ் சிங் கூறியதாவது: பிஎஸ்எஃப் இப்போது ட்ரோன் தொழில்நுட்பத்தை அதன் பயிற்சியில் கட்டாயப் பாடமாகச் சோ்த்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிஎஸ்எஃப் தன்னிறைவு பெற உதவும் வகையில் அண்மையில் ட்ரோன் பள்ளியும் திறக்கப்பட்டுள்ளது. இதை மேம்படுத்த புதிய விதிகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

எல்லைகளில் ட்ரோன்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதைத் திட்டமிட ஐஐடிகள் மற்றும் ஆராய்ச்சிக் குழுக்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ட்ரோன் பள்ளி இதுவரை 45 பணியாளா்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

இரண்டாவது பிரிவு தற்போது பயிற்சியில் உள்ளது. ஒவ்வோா் ஆண்டும் 500 பேருக்கு பயிற்சி அளிக்க பிஎஸ்எஃப் திட்டமிட்டுள்ளது. இதற்கான உபகரணங்களை வாங்க சுமாா் ரூ.20 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வளா்ந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க உக்ரைன்-ரஷியா போன்ற போா்களிலும் அமெரிக்கா, சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் ட்ரோன் பயன்பாட்டை பிஎஸ்எஃப் ஆய்வு செய்து வருகிறது எனத் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான இந்தியாவின் 6,000 கி.மீ. எல்லையை பிஎஸ்எஃப் பாதுகாக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest