
மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(எஸ்எஸ்சி) தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 142 நகரங்களில் உள்ள 194 மையங்களில் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு எஸ்எஸ்சி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வின்போது, பல தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் தேர்வு ரத்து அறிவிப்புகள், இணைய செயலிழப்புகள், பயோமெட்ரிக் சரிபார்ப்பு பிரச்னைகள், தவறான மையங்கள் ஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றால் தேர்வர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தேர்வர்கள் இதுகுறித்து தேர்வு ஆணையத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாட்டின் சில பகுதிகளில் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில்,
“மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி ஜூலை 25 ஆம் தேதியே பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
தொலைதூரத்தில் தேர்வு மையங்கள் அமைத்தது, குறைந்த எண்ணிக்கையிலான மையங்கள், தேர்வின்போது கணினிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் தேர்வு எழுதியவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
நாடு முழுவதும் இதனைக் கண்டித்து களத்திலும், சமூக வலைதளங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உடனடியாக இப்போராட்டத்திற்குச் செவிசாய்த்து எஸ்எஸ்சி தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட்டு எளிதாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி ஜூலை 25ஆம் தேதியே பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
தொலைதூரத்தில் தேர்வு மையங்கள் அமைத்தது, குறைந்த எண்ணிக்கையிலான மையங்கள், தேர்வின்போது கணிணிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள்… https://t.co/NhnhqnIDkw
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 4, 2025