
தில்லி – மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி இயங்காததால் ஆத்திரமடைந்த இரண்டு பயணிகள், விமானி அறைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம் திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், இரவு 7.21 மணிக்கு புறப்பட்டு மும்பைக்கு 9.05 மணிக்குதான் வந்து சேர்ந்தது.
இந்த விமானம் 7 மணிநேர தாமதத்துக்கான காரணம் வெளியாகாமல் இருந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கூறியதாவது:
”ஜூலை 12 அன்று தில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். தில்லி விமான நிலையத்தில் ஓடுதளத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் விமானி அறைக்குள் நுழைய முயற்சித்தனர்.
விமான கேப்டன், விமான ஊழியர்கள், சக பயணிகள் கோரிக்கை வைத்தும் இருவரும் இருக்கைக்கு திரும்ப மறுத்துவிட்டனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானம் மீண்டும் நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நியூ யார்க் – தில்லி விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், 2022 இல் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த வயதான பெண் மீது சக பயணி போதையில் சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
விமானத்துக்குள் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதிகளில் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.