
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணமானோம். விரிவாக்கப்பட்ட தூத்துக்குடியின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரு வாரம் கழித்து… அன்றுதான் பயணிகள் விமான சேவை இந்த முனையத்தில் துவங்கியிருந்தது.
இதை நடுவானில், விமானி அறிவித்த போது பலருக்கும் கிடைக்காத அனுபவம் நமக்கு கிடைக்க போகிறது என்பது தெரியவந்தது.

வெறுமனே 1.3 கிலோமீட்டர் தூரம் இருந்த விமான ஓடுதளத்தை 3.1 கிலோமீட்டர் தூரமாகவும்; 30 மீட்டர் அகலமாக இருந்த ஓடுபாதையை, 45 மீட்டர் அகலமாகவும் மாற்றியிருப்பதால், இனி A320 போன்ற பெரிய விமானங்கள் எல்லாம் கூட இங்கே தரையிறங்க முடியும் என்று செய்தி மகிழ்ச்சி அளித்தது. இனி இரவு நேரங்களிலும் இங்கே விமானங்கள் தரையிறங்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
16 செக் – இன் கவுன்டர்கள், மூன்று எக்ஸ்ரே ஸ்கேனிங் இயந்திரங்கள், பயணிகள் காத்திருக்கும் போது அமர 644 இருக்கைகள், 500 கார்களையும் 100 டாக்ஸிகளையும் நிறுத்துவதற்கான வசதி.. அதுமட்டுமல்ல விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விமானத்திற்குள் செல்ல மூன்று ஏரோ பிரிட்ஜ்., சென்ஃபோன் திரையில் படித்த தரவுகள் எல்லாம் தரையிலும் இருந்தன.

ஆனால் இன்று நாம் சொல்ல வந்த செய்தியே வேறு. அது நாம். பயணித்த ATR ரக விமானம் குறித்தது. குறைந்த தூர பயணங்கள் மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட சிறிய வகை விமானம் அது. சிறிய ஓடுபாதை கொண்ட, சிறிய விமான நிலையங்களுக்கு, குறைவான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல உகந்த விமானம். தூத்துக்குடி விமான நிலையத்தில் கால் பதித்தப்போது, புதுபொலிவுடன் இருந்த தூத்துக்குடி விமான நிலையத்தை முந்திக்கொண்டு நாம் பயணித்த விமானத்தில் பொறிக்கப்பட்டிருந்த VT-IRD என்ற எழுத்துக்கள் ஈர்த்தன.
பார்த்து பார்த்து சலித்த பழைய பொருட்களாகவே இருந்தாலும் அவற்றை புதிய இடங்களில் பார்க்கும் போது, இதுவரை புலப்படாத பக்கங்கள் தெரியும். அது என்ன VT-IRD என்று இணையத்தில் தேடினோம்.
கார்களுக்கு எப்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் TN(Tamil Nadu), AP (Andhra Pradesh).. என பதிவு எண்களுக்கு முன்னால் எந்த மாநிலத்தை சேர்ந்தது என்பதை குறிக்க இரண்டு எழுத்துக்களை கொடுப்பார்களோ – அப்படியான ஒரு பதிவு எழுத்துத்துதான் VT என்பது தெரிந்தது. VT-IRD என்பது நாம் வந்த அந்த விமானத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் அடையாளம். இதை கொடுப்பது ICAO எனப்படும் International Civil Aviation Organisation. இந்தியாவில் இயங்கும் அனைத்து விமானங்களுக்கும் VT என்ற பதிவு எழுத்துக்கள்தான் ஆரம்ப எழுத்துகளாக இருக்கின்றன.

இதில் VT என்ற எழுத்துக்கள் Viceroy’s Territory என்பதன் சுருக்கம். இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்ததால் `வைஸ்ராயின் ராஜ்யம்’ என்ற அர்த்ததில் VT என்ற அடையாள எழுத்துக்கள் கொடுக்கப்பட்டன. நாடு விடுதலை அடைந்த பிறகு பாகிஸ்தான், `எங்கள் விமானங்களுக்கு VT என்ற அடிமை அடையாளம் தேவையில்லை என்று Aircraft Pakistan என்பதன் சுருக்கமாக AP என்ற எழுத்துக்களை வாங்கிக்கொண்டது.
ஶ்ரீலங்காவும் VT வேண்டாம் என சொல்லி 4R என்ற எழுத்துக்களை வாங்கிக்கொண்டது. மியான்மார் கூட VTயை தூக்கி எறிந்துவிட்டு தன் விமானங்களுக்கு XY என்ற எழுத்துக்களை கேட்டு வாங்கிக் கொண்டது. கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று மட்டுமல்ல, கென்யா, போட்ஸ்வானா போன்ற நாடுகள் கூட அடிமை நாடாக இருந்த போது கொடுக்கப்பட்ட அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் விமானங்களுக்கு புதிய அடையாள எழுத்துக்களை பெற்றுக் கொண்டன.

ஆனால், இந்தியாவில் செயல்படும் விமானங்களின் மட்டும்தான் அதாவது, ஏர் இந்தியாவாக இருந்தாலும் சரி, விஸ்டாரா, ஸ்பைஸ் ஜெட் என்று எந்த விமான சேவை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, வைஸ்ராய் ராஜியத்தில்… எனப் பொருள்படும் படி VT-யை சுமந்து கொண்டிருக்கின்றன.