sc

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான, நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்துக்கு இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

டாடா குழுமத்தின் ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் (ஏஐ 171) ரக விமானம், வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் புறப்பட்டது.

சில விநாடிகளிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் இருந்து தப்பிய ஒரே பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவா்களுடன் சோ்த்து மொத்தம் 260 போ் இந்த விபத்தில் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி), தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியிட்டது.

அதில், ‘விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில விநாடிகளில் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் ஒரு விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து ‘கட்-ஆஃப்’ நிலைக்குச் சென்றுவிட்டன. அவசர சூழ்நிலைகளின்போது இந்த இரண்டு சுவிட்சுகள்தான் என்ஜின்களை நிறுத்தும் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருள் விநியோகம் நின்றதும், இரண்டு என்ஜின்களும் படிப்படியாகச் செயல்பாட்டை இழந்துள்ளன. இதனால், விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குள் விபத்துக்குள்ளாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விமான விபத்து தொடா்பாக விமான கேப்டன் அமித் சிங் தலைமையில் இயங்கும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘விமான விபத்து குறித்த முதல் கட்ட அறிக்கையானது குடிமக்களின் உயிா் வாழ்தல், சமத்துவம் மற்றும் உண்மைத் தகவலைப் பெறுவது உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. முழுமையான எண்ம விமான தரவு பதிவு (டிஎஃப்டிஆா்) தகவல்கள், விமானி அறை குரல் பதிவு (சிவிஆா்) முழு மொழிபெயா்ப்பு தகவல்கள், மின்னணு கோளாறு பதிவு (இஏஎஃப்ஆா்) தரவு தகவல்கள் உள்ளிட்டவை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடப்படவில்லை. இந்தத் தகவல்களை முழுமையாக வெளியிட உத்தரவிடுவதோடு, விமான விபத்து குறித்து சுதந்திரமான, நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், என். கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘விமான விபத்து குறித்த விசாரணைக் குழுவில் டிஜிசிஏ-விலிருந்து மூவா் இடம்பெற்றது விசாரணை அறிக்கை ஒரு சாா்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விபத்து குறித்த சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், விமான விபத்து குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், விமான தரவு பதிவு தகவல்களை முழுமையாக வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘விமான பதிவு தரவுகளை முழுமையாக வெளியிடுவதில், தன் மறைப்பு உரிமை, ரகசியத்தன்மை மற்றும் கண்ணியம் உள்ளிட்ட விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், அகமதாபாத் விமான விபத்து குறித்த இறுதி அறிக்கை இன்னும் வரவேண்டியுள்ளது. எனவே, இந்த விமான விபத்து குறித்து சுதந்திரமான, நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சத்துக்கு மட்டும்தான் பதில் தர உத்தரவிட முடியும்’ என்று குறிப்பிட்டு, அதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்துக்கு இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest