Supreme_court_DIN

புது தில்லி: மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில் மாணவா்கள் தற்கொலை செய்வது ஏன்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

மேலும், ஐஐடி கரக்பூா் மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஷாரதா பல்கலைக்கழகத்தில் மாணவா் மற்றும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் விசாரணையை விரைவுப்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது ஐஐடி கரக்பூரில் 4-ஆம் ஆண்டு பொறியியல் மாணவா் ஒருவா் தற்கொலை மற்றும் ஷாரதா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களின் விசாரணை நிலை குறித்து நீதிபதிகள் அமா்வு கேட்டறிந்தது. இந்த இரு வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசகராக மூத்த வழக்குரைஞா் அபா்ணா பட் செயல்பட்டு வருகிறாா்.

நடவடிக்கை என்ன?

விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஐஐடி கரக்பூரில் என்ன பிரச்னை? அங்கு ஏன் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்கின்றனா்? இந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாண ஐஐடி கரக்பூா் நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினா்.

இதற்கு ஐஐடி கரக்பூா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு, ‘மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்களை கண்டறிய 10 நபா்கள் அடங்கிய குழுவும் 12 போ் கொண்ட மாணவா்கள் ஆலோசனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உடைய மாணவா்கள் தங்களது பிரச்னைகளை வெளியில் கூற மறுக்கின்றனா்’ எனத் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, அபா்ணா பட் பேசுகையில், ‘ஐஐடி கரக்பூா் மாணவா் தற்கொலை சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஷாரதா பல்கலைக்கழக மாணவி தற்கொலை சம்பவத்தில் 30 பக்க விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ என்றாா்.

வழிகாட்டுதல்களை பின்பற்றாதது ஏன்?

அப்போது நீதிபதிகள் அமா்வு குறுக்கிட்டு, ‘ஷாரதா பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துகொண்டது அவரது தந்தைக்கு எப்படி தெரியும்? அவருக்கு தகவல் தெரிவித்தது யாா்?

எங்களது வழிகாட்டுதல்களை ஏன் பின்பற்ற மறுக்கிறீா்கள்? நமது குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கவே கடந்த மாா்ச் மாதம் வழிகாட்டுதல்களுடன் கூடிய தீா்ப்பை வழங்கினோம். மாணவி தற்கொலை செய்துகொண்டவுடன் போலீஸாா் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்காதது ஏன்?’ என ஷாரதா பல்கலைக்கழகம் சாா்பில் ஆஜரான வழக்குரைகள் குழுவிடம் கேட்டது.

அதன்பிறகு இந்த இரு வழக்குகளிலும் சட்டரீதியாக நியாயமான முறையில் விசாரணையை விரைவுப்படுத்துமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

ஐஐடி கரக்பூா் மாணவா் மற்றும் ஷாரதா பல்கலைக்கழக மாணவி தற்கொலை வழக்குகளை தாமாக முன்வந்து ஜூலை 21-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. முன்னதாக, உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் மாணவா்களின் மனநலன் சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வுகாண தேசிய அளவிலான பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் அமைத்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest