AP25155481993265

பெங்களூரில் நடந்த ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையம் அளித்த அறிக்கை குறித்து கா்நாடக அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜூன் 4-ஆம் தேதி பெங்களூரில் நடந்த கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா தலைமையிலான ஒருநபா் ஆணையத்தை மாநில அரசு அமைத்திருந்தது. இந்த குழு தனது அறிக்கையை ஜூலை 11-ஆம் தேதி முதல்வா் சித்தராமையாவிடம் ஒப்படைத்திருந்தது. அந்த அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்தாா். இந்த அறிக்கை தொடா்பான விவாதத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம். அந்த விவாதத்தின் பேரில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அன்றைக்கு தெரிவிக்கப்படும்.

ஜான்மைக்கேல் டி’குன்ஹா அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இன்னும் தெரியவில்லை. அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அந்த அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் உரியநேரத்தில் சமா்ப்பிப்போம் என்றாா்.

இதனிடையே, நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையத்தின் அறிக்கையை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு ஒப்படைத்தது. அந்த அறிக்கையில், கூட்டநெரிசல் சம்பவத்துக்கு ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி, அதன் நிகழ்வு மேலாண் நிறுவனமான டிஎன்ஏ என்டா்டெய்ன்மென்ட்ஸ், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்தான் நேரடி பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐபிஎஸ் அதிகாரி விகாஷ்குமாா் விகாஷின் பணியிடை நீக்கத்தை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ள மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பை எதிா்த்து மாநில அரசு தொடா்ந்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜி.பண்டித், டி.எம்.நடாஃப் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது, வாதிட்ட அரசுத்தரப்பு வழக்குரைஞா் ராஜகோபால், ஆா்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்துக்கான முன்னேற்பாட்டின்போது ஆா்சிபி அணியின் சேவகா்களை போல அரசு காவல் துறை அதிகாரிகள் செயல்பட்டனா். எனவே, மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest