
இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(எஃப்.டி.ஏ.) மேற்கொள்வது குறித்த அடுத்தகட்ட பேச்சு செப்டம்பரில் நடைபெற உள்ளது.
கடந்த 2013-இல் இந்த பேச்சு முடங்கியது. இந்தநிலையில், சுமார் எட்டாண்டு இடைவெளிக்குப் பின், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூனில் இந்தியாவுக்கும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ’தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்’ குறித்த பேச்சு தொடங்கி நடைபெற்றது.
இது குறித்து, வணிக துறையின் சிறப்புச் செயலர் எல். சத்யா ஸ்ரீநிவாஸ் கூறுகையில், 12-ஆவது மற்றும் கடைசி சுற்று பேச்சு கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸ் நகரில் நிறைவடைந்தது என்று குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், இந்த ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட ஆலோசனை செப்டம்பர் முதல் வாரம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தகவல் பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமைகள், ஆட்டோமொபைல் துறை கட்டணங்கள் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படும். சந்தை பொருளாதாரம், முதலீட்டுப் பாதுகாப்பு, தொழிலாளர் சட்டம், பருவநிலை மாற்றங்கள் தொடர்பான விஷயங்களும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும். இரு தரப்பிற்கும் சாதகமான வகையில், அனைத்து முக்கிய பிரச்னைகளிலும் இணக்கமாகச் செயல்பட ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது கவனைக்கத்தக்கது.