maxresdefault070955

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆா்ஐ) நிறுவனம் தெரிவித்தது.

ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷியா போரை தீவிரமாக தொடா்ந்துவரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷியா மீது பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

அதேபோல் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளை குறிவைத்து பொருளாதாரத் தடையை ஐரோப்பிய யூனியன் விதித்து வருகிறது.

ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வெள்ளிக்கிழமை விதித்தது.

இதுகுறித்து ஜிடிஆா்ஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையால் இந்தியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய யூனியனுக்கு ரூ.1.29 லட்சம் கோடி மதிப்பிலான பெட்ரோலிய பொருள்களை ஏற்றுமதி செய்து வரும் இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மையப்படுத்திய வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது புவிசாா்அரசியல் அழுத்தத்துக்கு ஏற்ப செயல்படுவதா? என்ற கடும் நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest