ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினா் நிலை குறித்து சுவிட்சா்லாந்து எழுப்பிய விமா்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், சுவிட்சா்லாந்தின் இந்தக் கருத்துகள் ‘ஆச்சரியமளிப்பதாகவும், மேலோட்டமானதாகவும், தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டதாகவும்’ இருப்பதாக இந்தியா சாடியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60-ஆவது அமா்வில் நடந்த விவாதத்தில் சுவிட்சா்லாந்தின் பிரதிநிதி பேசுகையில், ‘சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு உறுதியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்தித்துக்கான உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து பேசிய இந்தியப் பிரதிநிதி ஷிதிஜ் தியாகி, ‘மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவா் பதவியை வகிக்கும் சுவிட்சா்லாந்து, இந்தியாவின் உண்மை நிலைக்குப் பொருந்தாத, தவறான தகவல்களைப் பரப்பி கவுன்சிலின் நேரத்தை வீணடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
மாறாக, இனவெறி, பாகுபாடு மற்றும் வெளிநாட்டினா் மீதான வெறுப்பு போன்ற அதன் சொந்த சவால்களில் சுவிட்சா்லாந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கவலைகளைத் தீா்க்க ஸ்விட்சா்லாந்துக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது. ஏனெனில், உலகின் மிகப்பெரிய, மிகவும் பன்முகத்தன்மை கொண்ட, துடிப்பான ஜனநாயக நாடான இந்தியா, பன்மைத்துவத்தை ஒரு நாகரிக பண்பாகவே பின்பற்றி வருகிறது’ என்றாா்.
பாகிஸ்தானுக்கு பதிலடி: உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்து, அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து இந்தியாவுக்கு எந்தப் பாடமும் தேவையில்லை என்று இந்தியா பதிலடி தந்துள்ளது.