
ராய்பூர் : ‘ஐ லவ் யூ’ சொல்வதெல்லாம் பாலியல் குற்றமாகாது என்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போக்சோ வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குள்பட்ட இளம் பெண் ஒருவரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன காரணத்துக்காக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் மீது எந்தவொரு குற்றமுமில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் தாம்தரி மாவட்டத்தில் 15 வயதே நிரம்பிய பள்ளி மாணவியொருவரை காதலிப்பதாக அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் இளைஞர் ஒருவர் அன்பை பலவந்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதைத்தொடர்ந்து, அந்த மாணவி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் முன்னதாக பல தருணங்களில் அதே இளைஞர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
இதன் அடிப்படையில், அந்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. தாம்தரி மாவட்டத்தின் குருத் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ். அகர்வால் முன் நடைபெற்ற விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக சாட்சியங்களுடன் நிரூபிக்க முடியவில்லை. அவர் ‘அந்த’ எண்ணத்தில் சிறுமியிடம் பழக முயற்சிக்கவும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள்காட்டி, மாநில அரசின் மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.