ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், பள்ளிகள் மூடப்பட்டன. வாகனங்கள் ஓடாததால், புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெறிச்சோடின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஒடிஸாவின் பாலாசோா் மாவட்டத்தில் தன்னாட்சிக் கல்லூரி ஒன்றில் பயின்றுவந்த மாணவியை உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு என்பவா், தொடா்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாா் அளித்தும், உதவிப் பேராசிரியா் மீது கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கல்லூரி முதல்வா் அலுவலகம் முன் மாணவி கடந்த வாரம் தீக்குளித்தாா். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வந்த அவா், சிகிச்சை பலனின்றி கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடா்பாக உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, கல்லூரி முதல்வா் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், மாநில பாஜக அரசைக் கண்டித்தும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபாா்வா்டு பிளாக், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் சாலை, ரயில் மறியல்கள் நடைபெற்றன. இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவா்கள் கைது: தலைநகா் புவனேசுவரத்தில் முதல்வா் மோகன் சரண் மாஜீ இல்லம் அருகே காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒடிஸா காங்கிரஸ் தலைவா் பக்த சரண் தாஸ், கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் அஜய் குமாா் லல்லு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

‘பாஜக ஆட்சியின்கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக ஒடிஸா இல்லை. தினமும் சராசரியாக 15 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வா் மாஜீ பதவி விலக வேண்டும்’ என்று பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் ராம சந்திர கதம் வலியுறுத்தினாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest