rg1

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000 க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆளுங்கட்சியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் சான்றுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அடுத்து ஹைட்ரஜன் குண்டு வீசப் போவதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.

இதனிடையே, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து கர்நாடகத்தில் உள்ள அலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததைப் பற்றி சான்றுகளுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘தி அலந்து பைல்ஸ்’ என்ற தலைப்பில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:

”இன்று வெளியிட இருப்பது ஹைட்ரஜன் குண்டு கிடையாது. விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெளியிடப்படும். நாட்டின் இளைஞர்களுக்கு தேர்தல்களில் எவ்வாறு மோசடி செய்யப்படுகிறது என்பதை காட்டும் மற்றொரு மைல்கல் இது.

இந்திய ஜனநாயகத்தை அழித்த மக்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர், ஓபிசி உள்பட சில சமூகத்தைச் சேர்ந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்படுகிறது. தற்போது 100 சதவிகித ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை யாரோ ஒருவர் நீக்க முயற்சித்துள்ளார். தற்செயலாக அவர் பிடிபட்டுள்ளார்.” எனத் தெரிவித்தார்.

Attempt to deletion 6,000 voters in one constituency alone! Rahul alleges with evidence

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest