
லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் வடக்கு எல்லையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவு அளித்துவரும் லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவில் கடந்த டிசம்பர் மாதம் சர்வாதிகாரியான பாஷர் – அல்- ஆசாத்தின் ஆட்சியை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்ததைத் தொடர்ந்து அங்கு புதிய தலைமை, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
சிரியாவில் பாலைவனத்தில் வசிக்கும் பெடோயின் என்ற பழங்குடி மக்களுக்கும் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த மோதலை நிறுத்துவதற்காக அப்பகுதிகளுக்கு படைகளை சிரியா அரசு அனுப்பி வைத்தது. இதில் உயிரிழப்புகள் மட்டுமே அதிகரித்ததே தவிர, மோதல் நிற்கவில்லை.
இதனிடையே, இஸ்ரேல் இன்று சிரியாவின் அரசு கட்டடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. சிரியாவின் தெற்கில் உள்ள சுவேதா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதேபோன்று, லெபனானின் பேகா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிஸ்புல்லா ஆயுதப் படையினருக்கு ஆதரவுக்கரம் அங்கு அதிகம் உள்ளதால், அப்பகுதியை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.
இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், ஹிஸ்புல்லாக்களுக்கும், லெபனான் அரசுக்கும் இஸ்ரேல் விடுத்துள்ள தெளிவான செய்திதான் இந்தத் தாக்குதல். தங்கள் ராணுவத்தின் திறனை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில் எந்தவொரு தீவிர தாக்குதலையும் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | இஸ்ரேலை தாக்க முயன்ற ஹவுதிகளின் ட்ரோன் தகர்ப்பு!