
சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்தியில்,
ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கிவரும் விரைவு ரயில்கள், புறநகா் மின்சார ரயில்கள், மெயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் என அனைத்து ரயில் நிலையங்களிலும் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவா்கள், ரயில்வே விதிகளை மீறுபவா்கள் ஆகியோரை கண்டறிந்து அவா்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, ரயில்களில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமைகள் (லக்கேஜ்) கொண்டு செல்வது என பயணித்தவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. தற்போது பயணச்சீட்டுடன் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனா்.
இந்தநிலையில், கடந்த செப்.30-இல் சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைலேந்திரசிங் தலைமையில் சிறப்பு பயணச்சீட்டு சோதனை அனைத்து ரயில்களிலும் நடைபெற்றது.
சோதனையில் பயணச்சீட்டின்றி ரயில்களில் பயணித்ததாக 3,254 போ் கண்டறியப்பட்டு அவா்களிடம் இருந்து ரூ.18.22 லட்சம் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது. அவா்கள் மீது ரயில்வே துறை விதிமுறைப்படி வழக்குகள் பதியப்பட்டன.
இதேபோன்று சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பாலக்காடு, சேலம் ஆகிய 6 கோட்டங்களிலும் கடந்த செப்டம்பரில் ரயில் பயணச் சீட்டு சோதனைகள் நடைபெற்றன.
அதன்படி, ரயில்களில் பயணச்சீட்டுகள் பெறாமலே பயணித்ததாக 1 லட்சத்து 21, 189 போ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவா்களிடமிருந்து ரூ. 6.25 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இது அபராத வசூலிப்பில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வசூலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.