முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்திப்பதற்கு முன்பாகவே, நான் அவரை தொடர்புகொண்டேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்த நிலையில், ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் வருகிற ஆக. 26 ஆம் தேதி பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “’தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று நயினார் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை.
நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு ஜூலை 24 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ” என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், “முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் என்னைப் பற்றி குறை கூறினாலும், நான் அவரைப் பற்றி குறை கூறமாட்டேன்.
முதல்வரை ஓபிஎஸ் சந்திப்பதற்கு முந்தைய நாள்கூட பன்னீர் செல்வத்தை தொடர்புகொண்டு பேசினேன். ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் எனக்கு இன்னும் வரவில்லை. ஓபிஎஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நான்தான் அவரை தொடர்புகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்… பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை…